ஜனாதிபதியின் தூதுக் குழுவில் ஞானசார தேரர் ஜப்பான் சென்றாரா?- PMD விளக்கம்

253 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் விஜயத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக் குழுவில் பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரும் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றிருந்ததாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பில், ஜப்பான் விகாரைகளிலுள்ள நாயக்க தேரர்களுடன் ஞானசார தேரரும் கலந்துகொண்டிருந்ததாகவும் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஞானசார தேரரின் புகைப்படப் பிரதியை வைத்துக் கொண்டு ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் தேரரும் கலந்துகொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டு வெளிவரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான இனவன்முறை தீவிரவாத நடவடிக்கை நடைபெற்ற ஒரு வாரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலந்துகொண்டுள்ளமையானது பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களின் பின்னணியில் இருந்த அமைப்பாக பொதுபல சேனாவுக்கு பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அத்துடன், வட்டரக்க விஜித தேரர் கலந்துகொண்ட கூட்டத்திலும் பலவந்தமாக பிரவேசித்து பிரச்சினைப்படுத்தியமை, நீதிமன்ற வளாகத்தில் சன்தியா எக்னலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தற்பொழுது தேரருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் பலவும் விசாரணை நடைபெற்று வருகின்றன. இப்படியான ஒருவரை ஜனாதிபதி தனது விஜயத்தில் இணைத்துக் கொண்டுள்ளாரா என்ற விமர்ஷனங்கள் பல தரப்பிலும் எழுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியை ஜப்பானில் சந்தித்த கலகொட அத்தே ஞானசார தேரர் கண்டி தெல்தெனிய கலவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே பி.பி.சி.  சிங்கள செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பௌத்த நிகழ்வுகள் தொடர்பில் அவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும் டிலந்த விதானகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment