தீயில் சிக்கினாலும் குறையாத மன தைரியம்: மீண்டு வர போராடும் அனுவித்யா!

5641 0

தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னையை சேர்ந்த அனுவித்யா(25)சமீபத்தில் இமயமலை அடிவாரத்திற்கு மலைஏற்றம் சென்று வந்தவர்.

இதுவரை அவர் சென்ற மலை ஏற்றங்களில், அளவில் மிகவும் சிறியது தேனி குரங்கணி மலையேற்றம் என்று கூறும் அனுவித்யாவின் குடும்பத்தினர், மலை ஏற்றம், நீச்சல், மரத்தான் ஓட்டம் என பலவிதமான விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் அனுவித்யா என்கின்றனர்.

கடந்த டிசம்பர் 2017ஆம் ஆண்டில் ஐந்து கிலோமீட்டர் நீச்சல், 30கிலோமீட்டர் சைக்கிள் பயணம் அதை தொடர்ந்து 21 கிலோமீட்டர் ஓட்டம் என மூன்று போட்டிகளையும் ஒருசேரக்கொண்ட ‘ட்ரையத்லான்’ (Triathlon) போட்டியில் முழுஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றார் என அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

”இன்னும் கொஞ்ச நாட்களில் நான் ஊருக்கு வந்துவிடுவேன். எதுக்கு எல்லோரும் மதுரை வர்ராங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். அங்க சந்திக்கலாம்.” என தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு மருத்துவமனையில் இருக்கும் அனுவித்யா ஆறுதல் சொல்கிறார் என அவரது சகோதரர் ஜனார்த்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

துணிச்சலான பெண் என்றும், எப்போதும் தனது பையில் டூடுல் நூலை வைத்திருப்பார் என்றும், யாரவது சோர்ந்து காணப்பட்டால் உடனே அவர்களை உற்சாகப்படுத்த, நம்பிக்கை அளிக்கும் வாக்கியத்தை எழுதி நூலில் ஒரு ஓவியத்தை பின்னி பரிசளிப்பார் என அவரது சகோதரி மதுபிரியா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”அவள் சோர்ந்து நாங்கள் பார்த்ததில்லை. குரங்கணி மலையில் இருந்து மீட்கப்பட்டு, தீக்காயத்துடன் ஆம்புலன்ஸ்சில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் அப்பாவிடம் செல்ஃபோனில் பேசி நலமாக இருப்பதாகவும், தைரியாமாக இருங்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டுள்ளது என்று சொன்னாள். நாங்கள் வந்துபார்த்தபோது, மருத்துவர்கள் 80 சதவீதம் தீக்காயம் என்றார்கள். நாங்கள்தான் மனவருத்தத்துடன் இருக்கிறோம்,” என்று கூறுகிறார் மதுபிரியா.

மேலும் தனது சகோதரி அனுவித்யா, தன்னை மீட்கவந்த மலைவாழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிழைத்தவருவேன் என்று உறுதி கூறியதாக மதுபிரியா கூறினார்.

”வித்யா திரும்பி வந்ததும், முக்கியமான வேலை ஒன்றை செய்யவேண்டும் என்று சொன்னாள். அவளை மீட்க வந்தமலைவாசி ஒருவர் அவரின் சட்டை, லுங்கியை அவள்மீது போர்த்தியுள்ளார். பத்திராமா இருமானு சொல்லியிருகாரு. அவருக்கு நேரில்போய் நன்றி சொல்லவேண்டும்னு சொல்றா,” என்று சகோதரியை சந்தித்தபோது நடந்த உரையாடலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மதுபிரியா.

”வாட்டர்மிலன் ஜூஸ் ஐஸ் இல்லாம வேணும்னு கேட்டாள். டாக்டர்கள் கொடுக்கசொன்னங்க. எல்லோரும் பயத்தில் இருக்கிறோம். அவளோட வார்த்தைகள்தான் எங்கள தைரியாமா வச்சிருக்கு,” என்கிறார் அவர்.

தீக் காயங்களுக்கு அனுவித்யா சிகிச்சை எடுத்துவருகிறார் என்று தெரிந்ததும் அவர் பணிபுரிந்து வந்த க்ரூவ் ஸ்கூல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகிக்கும் நந்திதா கிருஷ்ணா அவரை பார்க்க மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

”வித்யா எங்கள் பள்ளியில் கற்றல்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பயத்தைப் போக்கி, எளிமையாக பாடங்களை கற்க உதவிசெய்துவந்தார். குழந்தைகளுக்கு டாக்டர் டாக் (doctor dog) என்ற நாய்க்குட்டியுடன் பழகவைத்து அவர்களின் அழுத்தத்தை போக்கும் பயிற்சியாளராக வித்யா செயல்பட்டுவந்தார். நான் பேசியபோது, மனதைரியத்துடன் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவேன் என்று கூறினார். அவரின் வார்த்தைகளில் இருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் அவரை மீட்கும்,” என்று  தெரிவித்தார் நந்திதா கிருஷ்ணா.

மதுரை மருத்துவமனையில் தீக்காய பிரிவில், அனுவித்யாவின் பெற்றோர் கஸ்தூரி மற்றும் முத்துமாலை மகளை அவ்வபோது சந்தித்துப் பேசிவருகின்றனர். மகளின் உறுதி அவரை மீட்டுவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

Leave a comment