தமிழ்நாட்டில் நிதி திரட்டிய ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிகை

226 0

தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் நிதி திரட்டிய ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேரும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவான காரியங்களில் ஈடுபட்டு வருவது பற்றி விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. அதன்பேரில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரித்ததில், அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையில், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இந்தியர் ஹாஜா பக்ருதீன் மற்றும் காஜா மொய்தீன், ஷாகுல் ஹமீது, அன்சார் மீரான் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் மேற்கண்ட 4 பேர் மீதும் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், ஹாஜா பக்ருதீன், தனது கூட்டாளிகளுடன் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி திரட்டியதாகவும், ஆட்களை தேர்வு செய்ததாகவும், பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

மேலும், 2013-ம் ஆண்டு இறுதியில், ஹாஜா பக்ருதீன் சென்னைக்கு 3 தடவை வந்ததாகவும், சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் பெங்களூருவில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாகவும், பின்னர் 2014-ம் ஆண்டு, தன் குடும்பத்துடன் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment