குரங்கணி தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

208 0

குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்தோரை 24 மணி நேரமும் கண்காணித்து உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் 15 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சென்னையை சேர்ந்த நிஷா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஜெயஸ்ரீ கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 13 பேருக்கும் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவர்களை கண்காணித்து உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 6 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 7 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது நிலைமை 50 சதவீதம் கவலைக்குரியதாகவே உள்ளது. சிலர் வாய்வழி உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குழுவை கொண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 பேருக்கும் வெண்டிலேசன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொருத்தி இருப்பதால் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதக்கூடாது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இதயம் மற்றும் உடல்உறுப்புகள் சிகிச்சைக்காக வெண்டிலேசன் பொருத்தப்படுவது உண்டு. அவர்கள் பத்திரமாக இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சிகிச்சை பெறுவோர் விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டார். அவர்களின் தீக்காய சதவீத விவரம் வருமாறு:-

1. திவ்யா, அய்யங்கோட்டை, ஈரோடு.

2. அனுவித்யா, சென்னை.

3. தேவி, சேலம் -75

4. கண்ணன், ஈரோடு -70

5. சிவசங்கரி, உடுமலை பேட்டை

6. சாய் வசுமதி, தஞ்சாவூர்

(இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்)

7. சுவேதா, சென்னை -66

8. பார்கவி, சென்னை -73

(மீனாட்சி மி‌ஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்)

9. சக்திகலா, திருப்பூர் -90

10. சதீஷ்குமார், சித்தோடு, ஈரோடு

11. திவ்யா விஸ்வநாதன், கிணத்துகடவு -90

(கென்னட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்)

12. நிவ்யா பிரக்ருதி, சென்னை -40

13. மினா ஜார்ஜ், கேரளா -35

(இவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்)

மதுரை கலெக்டர் வீரராகவராவ், ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் ஆகியோர் இரவுபகலாக ஆஸ்பத்திரியிலேயே முகாமிட்டு சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர்.

Leave a comment