ஆனமடுவ – புத்தளம் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் இன்று (11) அதிகாலை இனந்தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தற்பொழுது இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இது ஒரு இனவாத செயல் அல்லவெனவும், ஒரு நாசகார நடவடிக்கையே ஆகும் எனவும் இப்பகுதியில் ஏற்கனவே இருந்த சுமுக நிலைமையை மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் அங்கிருந்த ஹோட்டல் உரிமையாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மதீன ஹோட்டல் முழுமையாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ஹோட்டலின் அருகில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போதிலும், தீ வைக்கப்படும் போது அவர்கள் அந்த இடத்தில் இல்லாதிருந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

