காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் மனித உரிமையை மீறி நடந்து வருகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் 37-வது கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா உறுப்பினர்கள் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், காஷ்மீரில் பெருமளவு மனித உரிமைகள் மீறல் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி இந்தியா மீது சரமாரி புகார் அளித்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தரப்பில் பங்கேற்ற அரசு செயலர் தேவி கும்மம் பேசியதாவது:
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கூறுவது உண்மை கிடையாது. அது எங்கள் உள்நாட்டு விவகாரம். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளும், மனித உரிமைகள் மீறல்களையும் பற்றி இந்த உலகம் அறியும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைமீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், பயங்கரவாதிகளின் ஊடுருவலும் இந்தியாவிற்கு பெரும் இடையூறாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

