ஜெயலலிதா மரணம் விசாரணை- இளவரசி மகன் விவேக் மீண்டும் ஆஜர்

353 0

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இளவரசி மகன் விவேக் இன்று 2-வது முறையாக ஆஜரானார்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், செயலாளர் வெங்கடரமணன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, அரசு டாக்டர் பாலாஜி, அப்பல்லோ டாக்டர்கள், ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இளவரசி மகனும் ஜெயா டி.வி.யின் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஏற்கனவே கடந்த மாதம் 13-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

போயஸ் கார்டன் வீட்டில் விவேக் பல வருடங்களாக தங்கி இருந்தவர் என்பதால் அவரிடம் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நேரத்தில் விவேக் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று வந்தவர் என்பதால் சிகிச்சை கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு விவேக் சொன்ன பதில்கள் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு விசாரணையை கடந்த 28-ந்தேதிக்கு ஆணையம் ஒத்தி வைத்தது. ஆனால் அந்த சமயத்தில் நீதிபதி விடுமுறையில் இருந்ததால் ஆணையத்தில் இருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்படிருந்தது.

கடந்த வாரம் ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி பணிக்கு வந்ததும் விசாரணைகள் மீண்டும் தொடங்கியது.அதன்படி விவேக் இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்று காலை 10.15 மணிக்கு விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். ஜெயலலிதா போயஸ் கார்டனில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது யார்-யார்? உடன் இருந்தார்கள். ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை எத்தனை முறை சென்று பார்த்து வந்தீர்கள். அப்போது உடன் இருந்தவர்கள் யார்-யார்? ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிலர் விமர்சனம் செய்வதால் அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார். இதற்கு விவேக் விளக்கமாக பதில் அளித்தார்.

Leave a comment