சேலம்-சென்னை இடையே 7 ஆண்டுகளுக்கு பின், வருகிற 25-ந் தேதி விமான சேவை தொடங்குகிறது. இதன் பயண நேரம் 45 நிமிடம் ஆகும்.
சேலம்-சென்னை இடையே 7 ஆண்டுகளுக்கு பின், வருகிற 25-ந் தேதி விமான சேவை தொடங்குகிறது. பயண நேரம் 45 நிமிடம் ஆகும். கட்டணம் நபருக்கு ரூ.1,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்க ‘ட்ரூஜெட்‘ விமான நிறுவனம் முன்வந்துள்ளது.
வருகிற 25-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
சென்னை-சேலத்திற்கு விமானத்தில் பயணிகள் பயணிக்கும் நேரம் 45 நிமிடம் ஆகும். விமானத்தில் ஒரு பயணிக்கான கட்டணம் (வரிகள் உள்பட) ரூ.1,700 ஆகும். மொத்தம் 72 பயணிகள் செல்லும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளன.
இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் எம்.பி. கூறியதாவது:-
‘‘சேலம்-சென்னை இடையே விமான சேவை போக்குவரத்தை கொண்டுவர தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தேன். மேலும் மத்திய போக்குவரத்துத்துறை மந்திரியையும் பார்த்து முறையிட்டேன். அதன்பேரில் விமான சேவைக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

வருகிற 25-ந் தேதி முதல் தனியார் நிறுவனமான ‘ட்ரூஜெட்‘ விமானம் தனது சேவையை தொடங்குகிறது. வர்த்தகர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இந்த சேவையை பயன்படுத்திட முன்வர வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்.

