இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

297 0

strike4கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு, சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் மாநகர சபை, முழுமையாக பூட்டப்பட்டு, அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்று குறித்த வர்த்தகர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன்வந்திருப்பதாக தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது நகரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வாகனத் தரிப்பு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது அதன் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி அச்சுறுத்தி அவரை தாக்க முற்பட்டதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடருந்தும் அவர் கைது செய்யப்படாததைக் கண்டித்ததே மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.