ஹபீஸ் சயீதை கைது செய்ய கூடாது – பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் ஐகோர்ட் உத்தரவு

369 0

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்ய கூடாது என பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன்  புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளான்.
அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்க அரசின் நிர்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு போலீசார் தன்னை எக்காரணத்தை கொண்டும் கைது செய்யவோ, வீட்டுக் காவலில் வைக்கவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என லாகூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி ஹபீஸ் சயீத் வழக்கு தொடர்ந்திருந்தான்.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் நாட்டின் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாகாண அரசுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோர்ட்டின் நோட்டீசுக்கு பதில் அளிக்க தவறிய மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி அமீனுதீன் கான், கோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஹபீஸ் சயீதை கைது செய்ய தடை விதித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகள் இவ்விவகாரத்தில் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment