சர்வதேச மகளிர் தினம்- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

32406 0

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “சர்வதேச மகளிர் தின” வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாதகாலம் மகப்பேறு விடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அமைத்தது, இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிட பணிபுரியும் மகளிருக்கான விடுதி, வீரதீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது, சிறந்த பெண் மணிக்கு அவ்வையார் விருது, வரலாறு காணாத வகையில் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா போன்ற எண்ணிலடங்கா திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா செயல்படுத்தி வந்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியது, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் ‘‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை மகளிர் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி, பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் மாநகரமும், பெண்களுக்கான பாதுகாப்பான பெருநகரங்களின் பட்டியலில் சென்னை பெருநகரமும் இடம் பெற்றிருப்பது, பெண்களின் பாதுகாப்பில் அம்மாவின் அரசுமிகுந்த அக்கறை கொண்ட அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்து இருக்கின்றது.

தங்கள் வாழ்வில் எதிர் வரும் இடர்களை அஞ்சாமல் உறுதியுடன் எதிர் கொண்டு, அவற்றை வெற்றிப் படிகளாக்கி, இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment