நிதி உதவி நிறுத்திய பிறகும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றமில்லை – பாக். மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

12793 103

பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்திய நிலையிலும், பயங்கரவாத ஒழிப்பில் அந்த நாட்டின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ நிதி உதவி அளித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானும், அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்று வந்தது.

ஆனால், அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது என அமெரிக்கா கருதுகிறது.

இதனால் அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி விட்டது. ஆனாலும் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான முதன்மை துணை செயலாளர் ஆலிஸ் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கையில் பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்திய நிலையிலும், பயங்கரவாத ஒழிப்பில் அந்த நாட்டின் நிலைப்பாட்டில் உறுதியான, நிலையான மாற்றம் இல்லை. அவர்கள் தலீபான்கள் ஆதிக்கம் உள்ள இடங்களில் முக்கிய பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,

தலீபான்கள் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண்பதற்கு, பேச்சு நடத்தி, அந்த அமைப்பின் மீது நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் உதவ முடியும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment