யேர்மனியில் மீண்டும் களம் கண்ட தமிழ்க் கலைகள்.

5560 0

யேர்மனியில் வாழும் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழாலயங்கள் ஊடாகத் தாய்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் சென்ற ஆண்டிலிருந்து கலைத்திறன் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே அமோக வரவேற்பைப்பெற்ற கலைத்திறன் போட்டிகள் இவ்வாண்டும் தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தமிழாலயங்களில் தெரிவுப்போட்டியும் அதன் அடுத்த கட்டமாக மாநிலப் போட்டிகளும் நடைபெற்றன. அந்த வரிசையில் சென்ற 03.03.2018 சனிக்கிழமை கிறேபெல்ட் நகரில் கலைத்திறன் 2018 க்கான இறுதிப்போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
விடுதலை நடனம்
கும்மி
பரதம் நாட்டியம்
இரு வகையான வாய்ப்பாட்டுக்கள்
காவடி, கரகம், பொய்க்காற்குதிரை
நாடகம்
கூத்து
போன்ற முக்கிய கலைகளுக்கான 13 வகையான போட்டிகளில் மாநிலமட்டத்தில் முதலாம் நிலையைப்பெற்ற 350 க்கு மேற்பட்ட மாணவர்கள் இறுதிப் போட்டிகளில் தமது கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள். யேர்மனியில் நீண்டகாலமாகக் கலைப்பணியாற்றிவரும் சிறப்புமிக்க 65 க்கு மேற்பட்ட கலை ஆசான்கள் நடுவர்களாகப்பணியாற்றினார்கள். இறுதிப் போட்டியில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களை வரும் ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 28 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கவுள்ளதாகக் கலைத்திறன் போட்டிகளுக்குப் பொறுப்பான திரு.நவரட்னம் மனோகரன் அவர்கள் குறிப்பிட்டார்.

           

Leave a comment