தென்கொரிய பிரதிநிதிகளுக்கு விருந்து வைத்து அசத்தும் கிம் ஜாங் உன்

237 0

சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா வந்துள்ள தென்கொரிய பிரதிநிதிகள் குழு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசினர். 

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும் வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் மீது ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
இதற்கிடையே, கடந்த மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரியா தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் சற்றே தனிந்தது.
நீண்ட நாட்களாக இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் இரண்டாவது முன்னேற்ற நடவடிக்கையாக, வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இயூய்-யாங் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.
தென்கொரிய குழு
இந்த குழு, இன்று வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து பேசியுள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இந்த சந்திப்பில் தென்கொரிய பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
தென்கொரிய பிரதிநிதிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் இன்று இரவு விருந்து அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றிருந்த கிம், தற்போது பேச்சுவார்த்தை நடத்த இறங்கியுள்ளது அவரிடம் மாற்றம் ஏற்பட்டதை காட்டுகிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a comment