அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 5 பேர் பலி!

486 0

அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை பனிப்புயல் கடுமையாக தாக்கியது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர், மேரிலாண்ட், ரோடே தீவுகள் ஆகியவற்றின் பல்வேறு நகரங்களை பனிப்புயல் நேற்று பலமாக தாக்கியது.

அப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்றும் வீசியது. பனிமழையும் கொட்டியது. இதனால் சுமார் 1 அடி உயரத்துக்கும் மேலாக சாலைகளிலும், வீட்டின் மேற்கூரைகளிலும் பனி தேங்கியது.

அதேநேரம் கடற்கரையோர நகரங்களில் சூறாவளி காற்று காரணமாக மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. மசாசூசெட்ஸ் மாகாணத்தின் வாட்டர் டவுன் நகரில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

இந்த பனிப்புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை அமெரிக்காவில் 5 பேர் பலியாகி விட்டனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள ஜேம்ஸ் சிட்டி நகரில் மரம் முறிந்து விழுந்ததில் காரில் சென்ற 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார்.

இதேபோல் தெற்கு ரிச்மாண்ட் நகரில் மரம் முறிந்து விழுந்து 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். கிங்ஸ்வில்லே, புதாம் நகரங்களில் ஒரு மூதாட்டி உள்பட மேலும் 3 பேர் மரம் முறிந்து விழுந்து இறந்தனர்.

இதற்கிடையே, நியூயார்க் நகரில் உள்ள விமான நிலையங்களில் நேற்று முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை முடங்கியது. மேலும் 2,400 விமானங்களின் வருகை தாமதம் ஆனது.

இதேபோல் பனிப்புயல், வெள்ளம் தாக்கிய மாகாணங்களில் பயணிகளின் பாதுகாப்பு காரணம் கருதி ஆம்டிராக் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. வடக்கு கடலோர பகுதிகளில் உள்ள 14 மாகாணங்களிலும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கிழக்கு பாஸ்டன் நகரில் கடலை அலைகள் 14 அடி உயரத்துக்கு சீறி எழுந்தன. இதனால் ஏராளமான வீடுகளுக்குள் 4 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து கடலோர நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து 2-வது நாளாக இப்பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

Leave a comment