மக்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை தடுக்கும் சிரியா அரசு

4509 0

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. அங்கு நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

அங்கு 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய சிரியா அரசு ஒப்புதல் அளித்தது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்பு இருதரப்பும் தினமும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேபோல் வான்வெளி தாக்குதல் நடத்தப்படமாட்டாது என ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால் தரைவழி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியமாக கிழக்கு கவுட்டா பகுதியில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. அங்கு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஐ.நா. உதவிப்பொருட்களை அனுப்பியுள்ளது. 5 மணி நேர போர் நிறுத்தம் போதவில்லை எனவும், உள்ளே சென்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவே நேரம் சரியாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம் மருத்துவ உதவிகளை சிரிய அரசு தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு அனைவரும் திரும்ப அனுப்பப்படுகிறார்கள் என்றும், மக்களுக்கு பொருட்கள் கிடைக்க கூடாது என்று வேன்றுமென்றே இப்படி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மருத்துவ உதவிகள் கொண்டு செல்வதற்காக ரகசிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சுரங்கம் வழியாக சில நாட்கள் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் சுரங்கங்களையும் சிரியா அரசு மூடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் போராளிகள் சில சன்னி நாடுகளிடம் இருந்து உதவி பொருட்கள் வாங்குகிறார்கள். ஆனால் போராளிகள் அதை மிகவும் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறார்கள் இதனால் எந்த விதத்திலும் மக்களுக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர்வதில்லை. சிரியாவில் உதவிப் பொருட்களுக்காக பெண்கள் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment