வாதரவத்தைக்கான போக்குவரத்து சேவை குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் அமைச்சர் அனந்தி சசிதரன் அவசர ஆலோசனை!

4317 20

யாழ் புத்தூர் பகுதியில் உள்ள வாதரவத்தை கிராமத்திற்கான அரச போக்குவரத்து சேவையினை தொடங்குவது குறித்து கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

நீண்ட காலமாக போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வரும் வாதரவத்தை மக்களின் கோரிக்கை தொடர்பில் கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பி.டி.பாலசூரிய அவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து பிரதம நிறைவேற்று அதிகாரி அவர்களின் பணிப்பின்பேரில் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் திரு கேதீஸ் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதந்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் போது, வாதரவத்தை-யாழ்ப்பாணம் வழித்தடத்தில் பேரூந்து சேவையினை நடாத்துவதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைககள் குறித்து கௌரவ அமைச்சருக்கு செயற்பாட்டு முகாமையாளர் விளக்கமளித்திருந்தார். குறித்த பிரச்சினைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய தீர்வினை காண்பதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அதன் பின்னர் விரைவாகவே சீரான போக்குவரத்து சேவையினை ஆரம்பிப்பது எனவும் ஆலோசனையின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கௌரவ அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களது, மாகாண சபை உறுப்பினர்களுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 2.0 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புற்பாய் நெசவு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றிருந்த போது குறித்த பகுதி மக்களால் இப்போக்குவரத்து சேவை குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment