மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

220 0

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் ரூ.43.63 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்ய கால அவகாசத்தை பொதுப்பணித்துறை நீட்டித்திருந்தது. இந்தபணியில் ஈடுபடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி நிறுவனம், பி.எஸ்.கே நிறுவனம், வெங்கடாஜலபதி நிறுவனம், மாணிக்கம் நிறுவனம், ராஜதுரை நிறுவனம் ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தன. இதில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் நடந்த ஒப்பந்தப்புள்ளி ஒப்பளிப்பு குழு கூட்டத்தில் குறைந்த தொகை குறிப்பிட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

உத்தரவை பெற்ற இந்த நிறுவனத்துடன் 15 நாட்களில் ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் பணி தொடங்கும். இந்த பணியை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment