கம்போடியா நாட்டில் செனட் சபை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

1865 60

கம்போடியா நாட்டில் நடைபெற்ற செனட் சபை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றதாகவும் பிரதமர் ஹுன் சென் தலைமையிலான கம்போடியா மக்கள் கட்சி வெற்றிபெறும் என தகவல்கள் கூறுகின்றன.

கம்போடியா நாட்டில் ஹுன் சென் தலைமையிலான கம்போடியா மக்கள் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு 62 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 58 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு பிப்ரவரி 25-ந் தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நாட்டின் மன்னர் நொரோடம் சிகாமணி 2 உறுப்பினர்களையும், நாடாளுமன்றம் 2 உறுப்பினர்களையும் நியமிப்பார்கள். 58 இடங்களுக்கு நேற்று நடந்த தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டார்கள்.

பிரதமர் ஹுன் சென் தனது கண்டல் தொகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

பாராளுமன்ற சபாநாயகர் ஹெங் சாம்ரின், காம்போங் சாம் நகரில் ஓட்டு போட்டார். தலைநகர் நாம்பென் நகரில் நடந்த ஓட்டுப்பதிவை தேசிய தேர்தல் குழு தலைவர் சிக் பன் ஹோக் பார்வையிட்டார்.

இந்த தேர்தலில் பிரதமர் ஹுன் சென் தலைமையிலான கம்போடியா மக்கள் கட்சியே பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என நாம் பென்னில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment