ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு – உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

212 0

வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-2019-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆன்லைன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொடங்கப்படும்.

சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையமும், பெரிய மாவட்டமாக இருந்தால் 2 உதவி மையங்களும் தொடங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் உதவி மையங்கள் அமைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தனியார் கல்லூரிகளில் உதவி மையங்கள் தொடங்கப்படாது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஆன்லைன் கலந்தாய்வுக்கான தேதி விவரங்கள் அறிவிக்கப்படும். உதவி மையங்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிட்ட பின்னர் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது எப்படி? என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்குரிய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவிற்கான கட்டணத்தை (ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250) ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை எங்கிருந்தும் பதிவு செய்யலாம். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

தகுதி பட்டியல் தயார் செய்யும்போது ஏற்படும் சம நிலையை தவிர்க்க சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும். விண்ணப்ப படிவம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகவேண்டும். அங்கு தகவல்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி உதவி மையத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

தகுதிபெற்றவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகளை சரிசெய்ய ஒரு வாரம் காலஅவகாசம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில் விண்ணப்பதாரர் கள் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தை அணுகி குறைகளை சரி செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரம் (ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ரூ.1000) முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியபின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்காலிக இடஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தர வரிசைப்படி ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களின் ‘லாகின்’ வாயிலாக அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம். விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் கொடுக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் சேர்ந்து விட வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை படிப்பு, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பால் நிரப்பப்படாத இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக நடைபெறும்.

கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள் (இ-மெயில் அலெர்ட்) விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட இணையதள முகவரிக்கு அனுப்பப்படும்.

என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்களில் கணினியை விண்ணப்பதாரர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கலந்தாய்வுக்கான விண்ணப்பம், பதிவு செய்தல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், கல்லூரி தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை இந்த மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment