பீகாரில் 100 மணி நேரத்தில் 11,244 மேற்பட்ட கழிப்பறைகள் கட்டி சாதனை

1244 0

பீகார் மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள் கட்டி சாதனை புரிந்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் பிரதமராக மோடி பதவி ஏற்றபோது, தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி, 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு (2019-ம் ஆண்டு) காந்தி ஜெயந்திக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு திட்டமிட்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்து கழிப்பிடங்களை கட்டி வருகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள் கட்டி சாதனை புரிந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 10,000 கழிப்பறைகள் கட்டப்பட்டது என்பதை அறிந்தோம். எனவே, நாங்களும் அதுபோன்ற முயற்சியில் ஈடுபட முடிவு செய்தோம்.

கோபால்கஞ்ச மாவட்டத்தில் கடந்த 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள் கட்டி முடித்துள்ளோம். தெலுங்கானா மாநிலத்தின் சாதனையை தாண்டி விட்டோம். இந்த சாதனை நிறைவேற உறுதுணையாக இருந்தது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள தான். அவர்களது மன உறுதியால் இதை சாதிக்க முடிந்தது.

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதலே இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளனர்.

Leave a comment