“அரசியலில் இருந்து நிரந்தரமாக என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது” – நவாஸ் ஷெரீப்

351 0

கட்சித்தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது என்று கூறினார்.

கட்சித்தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது என்று கூறினார்.

பாகிஸ்தானில் பிரதமராகவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (நவாஸ்) தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் நவாஸ் ஷெரீப். இவர் “பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ஒரு சேர இழந்தார். அதைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியாது என்னும் பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1976-ல் உள்ள விதியை நீக்கி, அரசு ஊழியர் அல்லாத எவரும் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி தேர்தல் சீர்திருத்த மசோதா இயற்றப்பட்டது.

இந்த மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி மம்னூன் உசேனின் ஒப்புதலைப் பெற்று சட்டமானது. (தேர்தல் சட்டம்-2017)

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால் அதிலும் சிக்கல் வந்தது.

நவாஸ் ஷெரீப் கட்சித்தலைவர் பதவி ஏற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 17 பேர் வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில், நவாஸ் ஷெரீப் வகித்து வருகிற கட்சித்தலைவர் பதவியைப் பறிக்க உத்தரவிட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக அமைந்து இருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், அவரை கட்சித்தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிபதிகள், “பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் நவாஸ் ஷெரீப் பெயரை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நீக்கி விட வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

மார்ச் 3-ந் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் நவாஸ் ஷெரீப் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார். இப்போது நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து கட்சித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு விட்டதால் அவர்கள் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.

இதன் காரணமாக நாடாளுமன்ற கீழ்சபையை போன்று மேல்சபையிலும் மெஜாரிட்டியைப் பெற்று விடலாம் என நினைத்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (நவாஸ்) கனவு நிறைவேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடந்து வருகிற ஊழல் வழக்குகளின் விசாரணையில் நேற்று ஆஜரான நவாஸ் ஷெரீப் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “எனக்கு எதிராகவும், தேர்தல் சட்டம்-2017 தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு, நான் எதிர்பாராதது அல்ல” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “முதலில் அவர்கள் (சுப்ரீம் கோர்ட்டு) நிர்வாகத்தை முடக்கினார்கள். இப்போது சட்டம் இயற்றும் பாராளுமன்ற அதிகாரத்தை பறித்துக்கொண்டு உள்ளார்கள். பனாமா கேட் வழக்கில் பிரதமர் பதவியை பறித்தனர். இப்போது வந்து உள்ள தீர்ப்பு, கட்சித்தலைவர் பதவியை பறித்து உள்ளது. இப்போது என்னை மட்டும் விட்டு வைத்து இருக்கிறார்கள். என் பெயரான முகமது நவாஸ் ஷெரீப் மட்டும் எஞ்சி இருக்கிறது. இதையும் பறிக்க விரும்பினால் பறித்துக்கொள்ளுங் கள்” என்று கூறினார்.

மேலும், “தற்போது அவர்கள் என்னை அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவது தொடர்பாக பேச்சு (சதி) நடத்திக்கொண்டு இருக் கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment