சம்பந்தனை சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

323 0

இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்ட வேண்டும் என் தெரிவித்த அதேவேளை, புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையை பெற வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் கருத்து கூறிய இரா. சம்பந்தன், இந்த தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில்  காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் .மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment