அமெரிக்காவில் எந்திர துப்பாக்கிக்கு தடை – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

251 0

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால், எந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால், எந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 14-ந் தேதி புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகரில் உள்ள மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியானது, அந்த நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்ற குரல் பரவலாக வலுத்து வருகிறது.

பார்க்லேண்ட் நகர் பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேரை பலி கொண்ட ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை மாகாண சட்டசபை ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், பார்க்லேண்ட் நகர் பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்கள், புளோரிடா மாகாணத்தின் தலைநகரான டலஹாசியில் மாகாண சட்டசபை முன் நேற்று போராட்டம் நடத்தினர்.

சட்டசபை உறுப்பினர்களையும் சந்தித்து பேசினர். பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் அமைப்பு ரீதியில் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் நிர்ப்பந்தங்கள் வந்து உள்ள சூழலில், ஒரே நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ரவுண்டுகள் சுட்டுத்தள்ள துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் ‘பம்ப்ஸ்டாக்’ என்ற உபகரணத்துக்கு தடை விதிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக முடிவு எடுத்தார்.

பாதி தானியங்கி துப்பாக்கிகளில் (செமி ஆட்டோமேட்டிக் ரைபிள்ஸ்) ‘பம்ப்ஸ்டாக்’ பொருத்தி விட்டால், அது எந்திர துப்பாக்கியாக மாறிவிடும். ஒரு நிமிட நேரத்தில் பல நூறு ரவுண்டுகள் சுடும். இந்த ‘பம்ப்ஸ்டாக்’ சட்ட விரோதமானது என அறிவித்து சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு சட்டத்துறைக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதுபற்றி டிரம்ப் குறிப்பிடும்போது, “புளித்துப்போன வெற்று பேச்சுகள், அலுப்பூட்டும் வாதங்களைக் கடந்து ஆதார அடிப்படையிலான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைதான் உள்ளபடியே வேலை செய்யும்” என்று கூறினார்.

இந்த ‘பம்ப்ஸ்டாக்’ தான் அங்கு லாஸ்வேகாஸ் இசை விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த ‘பம்ப்ஸ்டாக்’கை வெறும் 100 டாலருக்கு (சுமார் ரூ.6,500) எளிதாக வாங்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

இப்போது இந்த ‘பம்ப்ஸ்டாக்’ மீது தடை விதிப்பது என்பது எந்திர துப்பாக்கிக்கு தடை விதிப்பதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் அமெரிக்காவில் நடந்த பல துப்பாக்கிச்சூடு சம்பவங்களின்போது, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a comment