மாலத்தீவு பதற்றத்துக்கு இடையே கிழக்கு இந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்கள்

244 0

மாலத்தீவு பதற்றத்துக்கு இடையே 11 சீன போர்க்கப்பல்கள் கிழக்கு இந்திய பெருங்கடலில் நுழைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் அரசியல் குழப்பமான சூழலில், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மாமூன் அப்துல் கயூம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அங்கு நெருக்கடி நிலையை அதிபர் மாமூன் அப்துல் கயூம் அமல்படுத்தி உள்ளார்.

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா ராணுவத்தை அனுப்பி தீர்வு காண உதவ வேண்டும் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் மாலத்தீவு பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாமல், நிலைமையை உற்று நோக்கி வருகிறது. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் 11 சீன போர்க்கப்பல்கள் கிழக்கு இந்திய பெருங்கடலில் நுழைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ள சீன இணையதளம் (சீனா.காம்.சிஎன்.), “நீங்கள் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்களையும், தளவாடங்களையும் பார்த்தால், இந்தியா மற்றும் சீனா கடற்படைகளுக்கு இடையே பெரிய அளவில் இடைவெளி இல்லை” என்று கூறி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க சீன ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்படையின் மீட்பு பயிற்சி நடவடிக்கைகள் பற்றிய படங்களை தனது இணையதளத்தில் சீன ராணுவம் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment