ரஷியா சர்ச்சில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பெண்கள் பலி

225 0

ரஷியாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து பெண்கள் உயிரிழந்தனர். 

ரஷியாவின் தாகெஸ்தான் குடியரசுக்கு உட்பட்ட வடக்கு காக்கேசியா பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதியின் கிஸ்லியார் நகரில் ஒரு கிறிஸ்துவ தேவாலயம் அமைந்துள்ளது.

இந்த சர்ச்சில் நேற்று சிறப்பு ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது சர்ச்சினுள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர். வருகிற மார்ச் 18-ம் தேதி ரஷிய அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment