காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சி கூட்டம் – முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

227 0

காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான வழக்கினில் தமிழகத்தின் நலன் காக்கும் நியாயமான வாதங்கள் ஏராளமாக இருந்தும் அவற்றை உரிய முறையில் எடுத்து வைக்கத் தவறிய இன்றைய ஆட்சியாளர்களால், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது வெளிவந்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்குக் கிடைத்த 192 டி.எம்.சி. காவிரி நீரில் 14.75 டி.எம்.சி. நீரைப் பறிகொடுத்து விட்டு நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி வரலாறு முழுவதையும் அறிந்துகொள்ளாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் நடுவர் மன்றம் ஏற்கனவே நிலைநாட்டியுள்ள தமிழகத்தின் காவிரி உரிமைகளை உறுதி செய்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அப்படி உறுதி செய்யப்பட்ட அம்சங்கள் எல்லாம் முறைப்படி காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எடுத்து வைத்து வாதாடிய காரணத்தினால்தான் நடுவர் மன்றம் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியது என்பதை முதலமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்கான கோரிக்கை காவிரி நடுவர் மன்றத்தில் முன்பும் வாதிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீர் குறித்தும் வாதிடப்பட்டது. ஆனால் இரண்டையும் ஆக்கபூர்வமான வாதங்கள் மூலம் நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்து, “காவிரி படுகையில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டு நீரை பங்கிட முடியாது” என்று புள்ளிவிவரங்களுடன் வாதிட்டு காவிரி இறுதி தீர்ப்பில் தமிழகத்தின் உரிமையை நடுவர் மன்றம் முன்பு நிலைநாட்டியது கழக அரசு என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதே பழைய வாதங்களை இப்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு கர்நாடக மாநிலம் மீண்டும் முன் வைத்த போது அதை புள்ளிவிவரங்களுடன் முறியடிக்க முடியாமல் கோட்டை விட்டு, தமிழகத்தின் காவிரி உரிமையை பறிகொடுத்திருப்பது திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு என்று மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இவற்றை உச்சநீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் முறைப்படி எடுத்து வைத்து வாதிடவில்லை என்பதும், ஏற்கனவே காவிரி வழக்கில் தி.மு.க. ஆட்சி காலத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்களை அரசியல் காழ்ப்புணர்வினாலும் சொந்த காரணங்களுக்காவும் மாற்றியதால்தான் இன்றைக்கு தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரில் 14.75 டி.எம்.சி.யை பறிகொடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் தவிப்பதற்கு காரணம் அ.தி.மு.க. அரசின் திறனற்ற வாதங்கள்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.

உச்சநீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு நமது மாநில உரிமைகள் சார்ந்த உரிய தகவல்களை கொடுக்காமலும், அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமலும் தமிழகத்திற்கான காவிரி உரிமையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. தி.மு.கவின் முயற்சியில் வெளிவந்த இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, காவிரி நதி நீர் ஆணையம் அனைத்தும் தமிழக நலன் சார்ந்தது என்று இப்போதாவது அதிமுக சார்பில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தெவித்திருப்பதும், 1974ல் தி.மு.கழக அரசு எடுத்த நிலைப்பாட்டை உறுதியும் செய்துள்ளது. எல்லா வகையிலும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தொடர்ச்சியாக செயல்பட்டிருப்பது தி.மு.க.தான் என்பதே வரலாறு.

ஆகவே இனியும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அறிக்கை விடுவதை நிறுத்திக் கொண்டு, காவிரியில் இழந்த 14.75 டி.எம்.சி. நீரை திரும்பப் பெறுவது எப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை இனியும் தாமதம் செய்யாமல் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது எப்படி என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தையும், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தையும் உடனடியாக கூட்டி மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment