கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

270 0

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். 

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதற்கிடையே, நடிகர் ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். அப்போது, ‘ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை. என்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருக்கிறார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்றார்.
இந்நிலையில், தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று இரவு சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
கருணாநிதியை சந்தித்தபின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பயணத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ் மற்றும் தமிழக மக்களின் பால் உள்ள அக்கறை ஆகியவற்றை கண்டு வியந்திருக்கிறேன். எனது கொள்கையை தி.மு.க. புரிந்தபின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
21-ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்குமுன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன். அதற்காகத் தான் ரஜினியை சந்திக்க வந்தேன் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இவர்களது சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a comment