மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது அழகல்ல – போக்குவரத்து துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

299 0

மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது கொஞ்சமும் அழகல்ல என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகங்களை செம்மையாக்க நடவடிக்கை எடுங்கள் என்றும், மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது கொஞ்சமும் அழகல்ல என்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது தலைமையிலான குழு தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலைமை மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நிலைமைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரையை மு.க.ஸ்டாலின் மூலமாக அளித்தது.

அதனை ஆய்வறிந்து அதில் உள்ள பரிந்துரைகளைப் பற்றி புரிந்திருந்தாலும் உணராதது போல் அரசியல் ரீதியாக ஏட்டிக்குப் போட்டி என்னும் ரீதியில் புள்ளிவிவரங்கள் சரியில்லை. ஓட்டை இருக்கிறது, உடைசல் இருக்கிறது என்கின்ற பாணியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த பேட்டிக்கு விளக்கங்கள் சிலவற்றை மக்கள் நலனுக்காக முன்வைக்க விரும்புகிறோம்.

இத்துறைக்கு ஏனைய இதர துறைகளைப் போல மானியங்கள் அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் வெளிப்படையான மானியங்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் அமைச்சர் வெளிப்படை என்பதற்கு அர்த்தம் புரிந்தோ அல்லது புரியாதது போலோ மானியம் வழங்கப்படுகின்றது. அதில் ஒன்றும் ஒளிவுமறைவு இல்லை என்று கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியுள்ளது போல 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த துவக்க காலத்தில் அவர் கூற்றின்படியே நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி அளவில் நட்டம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி என்றால் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1,500 கோடி நட்டம் என்று கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் அரசு பல்வேறு இனங்களில் மானியமாக ரூ.1,600 கோடிக்கு மேலாக வழங்கி இருப்பதாகவும் கூறுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

இதனையேதான் நாங்கள் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அரசே ஏற்று ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என கூறுகின்றோம். பஸ் கூடுகட்டுவதற்கு மாதம் ஒன்றுக்கு 150 பஸ்கள் கூடுகட்ட வாய்ப்பு உள்ளது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த கணக்கின்படி, ஆண்டொன்றுக்கு 1,800 பஸ்கள் கூடு கட்டலாம். கடந்த 7 ஆண்டுகளில் அரசு வாங்கியதோ 4,800 பஸ்கள் தான். ஆனால், ஒரு பஸ் கூட கட்டப்படவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து துறை அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் அளித்திட்ட அறிக்கையினை படித்துப் பார்த்து அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை களைவதற்குப் பதில் வக்கணை பேசியிருப்பது தேவையற்றது.

இந்த அரசு தக்க நடவடிக்கைகளை தாமதமின்றி எடுத்து அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் செம்மையாகச் செயலாற்றி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டுமே தவிர எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிப்பது கொஞ்சமும் அழகல்ல. கண்டனத்துக்கும் உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment