அரசியல் மட்டத்தில் கட்சிகளிடையே நான்கு பேருடைய பெயர்கள் பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தொடர்ந்தும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக வைத்திருக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் இந்த கருத்தையே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு குழு இரகசியமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் தீர்வாக புதிய பிரதமராக சபாநாயகர் கருஜயசூரியவையோ அல்லது அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவையோ நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க் கட்சி என்பவற்றின் பெரும்பாலானவர்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் பிரதமர் பதவி குறித்தும், தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதா? இல்லை? என்பது குறித்தும் விசேட அறிவிப்புச் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

