பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது. பலர் இங்கு ஒளிந்து கொண்டு நாசவேலையில் ஈடுபட பயிற்சி பெற்று வருகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பழுது காரணமாக 2 மாதங்களாக ஒரு கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் திடீரென்று ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
அந்த கப்பலின் கீழ்ப்பகுதியில் உள்ள 3-வது தளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென்று புகை எழும்பியது என்று கூறினார்கள். எனவே கியாஸ் கசிவு காரணமா? அல்லது தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு 2 மாத சம்பளமும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விபத்து நாசவேலை காரணமாக நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உண்மை தெரிந்துவிடும்.
தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது. பலர் இங்கு ஒளிந்து கொண்டு நாசவேலையில் ஈடுபட பயிற்சி பெற்று வருகிறார்கள். அது உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் அரசுக்கு அறிக்கை கொடுப்பது இல்லை. அதுபோன்று அரசுக்கும் தெரிந்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதுஇல்லை.
மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளது. இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர்.
கோவையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட ஒவ்வொரு கோவில்களிலும் தீ விபத்து நடந்து வருகிறது. பழனி, திருச்செந்தூர் உள்பட அனைத்து கோவில்களுக்கு சென்றாலும், கோவில்களுக்குள் ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு கடைகளை வைக்க அனுமதி கொடுத்தது யார்?. கோவில் புனிதமான இடம். அதை தமிழக அரசு வியாபாரம் நடக்கும் சந்தையாக மாற்றிவிட்டது. சில கோவில்களில் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வழியை அடைத்து கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கடைகள் வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு செல்பவர்களை கூவி, கூவி அழைக்கிறார்கள். கோவில்கள் சாமி தரிசனம் செய்யும் இடம்தான். அதை வியாபாரம் செய்யும் சந்தையாக மாற்றக்கூடாது.
கோவில்களில் இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும். அரசால் கோவில்களை பராமரிக்க முடியவில்லை என்றால் அந்தந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விடலாமே. இதற்கிடையே ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க ஐகோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதுதானாக நடந்தது கிடையாது. திட்டமிட்ட சதி. அதுபோன்று தற்போது கோவில்கள் தீப்பிடித்து வருவதால் அதை சாதாரணமாக நினைக்கக்கூடாது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் இதுவும் திட்டமிட்ட சதியாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு அதுதொடர்பான விசாரணையை முடுக்கி விடவேண்டும்.
தமிழகத்தில் லாபகரமாக இயங்காத ஆலைகளைதான் மத்திய அரசு மூடி வருகிறது. மத்திய அரசு நமது நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் தான் அரசு. மத்திய அரசு அறிவிக்கும் சில திட்டங்களை மாநில அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் பலன்களை தடுக்கிறார்கள் என்பதே எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.

