பழனியில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என சித்த மருத்துவக் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவக் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். சித்த மருத்துவ கல்லூரி ஆண்டு மலரை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன் ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், பழனியில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவம், இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தை மக்களுக்கு விளக்கும் விதமாக ஏராளமான மூலிகை செடிகளும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். 18-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

