தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேலதிகமாக இரண்டுகோடி நிதி வழங்கப்பட்டதை இலஞ்சம் என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் 5 கோடி வாங்கியது குஞ்சமா என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோதே அவர் இதனையும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் இது பணமாக கொடுக்கப்படவில்லை மாறாக நிதியொதுக்கீடாகவே வழங்கப்பட்டுள்ளது எனவே நிதியாக ஒதுக்கப்பட்டதை மக்களுக்காக பாவிப்பதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடு.
இவை வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னரே வழங்கப்பட்ட ஒன்றாகும் விசேட நிதியொதுக்கீடு போல இவை பிரதமரின் தனிப்பட்ட நிதியொதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு 2015ம் ஆண்டுக்கு பின்னர் பிரதமராக ரணில் பதவியேற்று மார்ச் மாதமளவில் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை அவர் இலஞ்சம் என்றால் இது என்ன குஞ்சமா என அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த விடையத்தில் பிரதமரால் பணமாக வழங்கப்பட்டிருந்தாலோ கூட்டமைப்பு எம்பிக்களால் வாங்கப்பட்டிருந்தாலோ அது தவறு மாறாக அது ஒரு வேலைத்திட்டமாக மக்களை சென்றடைகின்றமை என்றால் அது தவறல்ல என தெரிவித்தார்.
மேலும் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை நாங்கள் எதிர்க்கட்சியாகவே இருக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

