உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதம் ஆகும்

208 0

வார்டு வரையறை பணி முடியாததால் உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் 2016 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப்போட்டது.

இதைதொடர்ந்து இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே வார்டுகள் வரையறை செய்யும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. பெண்கள், ஆதி திராவிடர் இட ஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வார்டுகளை மறு சீரமைக்கும் பணி தமிழகம் முழுவதும் 2 மாதமாக நடைப்பெற்று வருகிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் வார்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தன.

சென்னையில் 15 மண்டலங்களாக இந்த பணி நடந்தது. வார்டுகளில் உள்ள மக்கள் தொகை, வாக்காளர்கள் எவ்வளவு எனக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் அதிகமாக உள்ள வார்டுகள் குறைவாக உள்ள வார்டுகளின் பகுதிகளை இணைத்து சீரமைக்கப்பட்டன.

இதுகுறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை கேட்க ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டன. அதுபோல இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்ட போதிலும் இந்த பணிகள் நிறைவடையாததால் தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சிரமம் ஏற்பட்டது.

வார்டுகள் மறுசீரமைக் கப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனுவை ஒப்படைத்தால் தான் உள்ளாட்சி தேர்தல் எந்த தேதியில் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

ஆனால் வார்டு வரையறைப் பணிகள் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் முடிந்து விட்டது. சென்னையில் 7 மண்டலங்களில் மட்டுமே இந்த பணி நிறைவடைந்துள்ளது. மற்ற 8 மண்டலங்களில் இதுவரையில் பணிகள் முடிவடையாததால் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பைரோஸ் சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னையில் இந்த பணியில் ஒரு பகுதி இன்னும் முடிவடையாமல் இருப்பதால் தாமதம் ஆகிறது. சென்னை மாநகராட்சி வார்டு மறு வரையறை குழுவிடம் இருந்து அறிக்கை பெற்ற உடன் அரசிடம் அனுமதி பெறப்படும். இறுதி அறிக்கை தயார்செய்யப்பட்ட பிறகுதான் அரசுக்கு அனுப்ப முடியும் என்றார்.

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் அடுத்த மாதம் வார்டு சீரமைக்கப்பட்ட இறுதி அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கிறார். அதன் பின்னர் தான் அரசிடம் இருந்து அனுமதி பெற முடியும்.

அதனால் உள்ளாட்சி தேர்தல் 3 மாதங்களுக்கு இடையே நடைபெற வாய்ப்பு இல்லை. மே அல்லது ஜூன் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அரசு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் இறுதி வரையில் நடைபெறுவதால் கோடை விடுமுறைக்கு பிறகு நடைபெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment