பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு

219 0

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தன.

இந்த நிலையில், ஜெயலலிதா படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். விழாவில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விழாவில் பங்கேற்கவில்லை. படத்திறப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் விழாவிற்கு வரவில்லை.

சட்டப்பேரவையில் காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 11-வது தலைவராக ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் இடம்பெறும் முதல் பெண் தலைவர் படம் இது ஆகும்.

7 அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட இந்த படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். பச்சை நிற சேலையுடன் ஜெயலலிதா நிற்பது போன்று வரையப்பட்டுள்ள இந்த படத்தில், ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என எழுதப்பட்டுள்ளது.

Leave a comment