எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

1567 0

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த நேரமும் தீர்ப்பு வரலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு அதிகரித்து உள்ளது.

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த நேரமும் தீர்ப்பு வரலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு அதிகரித்து உள்ளது.

கோர்ட்டு தீர்ப்பு ‘செல்லும்‘ என்று வந்தால் என்ன செய்வது?

இதுபற்றித்தான் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முகாமிலும், தினகரன் முகாமிலும் ஆலோசனை நடக்கிறது. முடிவெடுக்க முடியாமல் திணறும் ஆலோசனையால் பலரது தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம்.

கோப, தாபங்கள் இருந்தாலும் ஆட்சி மீதான ஆசை மட்டும் இரு அணியினரிடமும் பொதுவாகவே இருக்கிறது.

ஈகோ பிரச்சினையால் ஆட்சியை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தோடு இணைப்பு முயற்சியும் ரகசியமாக நடக்கிறது.

இரு அணிகளும் இணைய வேண்டுமெனில் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரையும் நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை தினகரன் அணியினர் முன்வைத்துள்ளார்கள்.

இந்த பக்கம், இப்படி முடிவெடுக்க முடியாமல் தலையை பிய்த்து கொண்டிருக்கும்போது அந்த பக்கம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிலமையை சத்தமின்றி உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறார்.

18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று கோர்ட்டு அறிவித்தால் பெரும் பான்மையை இழந்து தானாகவே ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு அதிகம்.

செல்லாது என்று தீர்ப்பளித்தால் ஆட்சியை தொட ருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது தான் அணிகளுக்குள் பிரச்சினையும் தீவிரமாகும்.

தங்கள் நிபந்தனையை ஏற்றால் மட்டுமே ஆதர வளிப்போம் என்று தினகரன் தரப்பு முரண்டு பிடிக்கலாம்.

அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டால் எடப்பாடி தரப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த பிரச்சினைகளை எல்லாம் திரைமறைவில் பேசி ராசியாகி விடலாம்.

ஆனால் கவர்னர் என்ன முடிவெடுப்பார்? என்பதை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. கவர்னரை பொறுத்தவரை நேர்மையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒத்துக் கொள்கிறார்கள். எனவே சட்டப்படி கவர்னர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியில் ஓ.பி.எஸ். மத்திய அரசின் செல்வாக்கை பெற்றார். ஆனால் ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இணைப்புக்கு பிறகு ஈ.பி.எஸ். மத்திய அரசுடன் நெருங்கினார்.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மத்திய பா.ஜனதாவை யோசிக்க வைத்தது.

அ.தி.மு.க.வின் எந்த அணியுடன் கூட்டணி சேர்ந்தாலும் எடுபட போவதில்லை என்பதை உளவுத்துறை மூலம் பா.ஜனதாவினர் உணர்ந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தான் இப்போது அ.தி.மு.க. வின் இரு அணிகளையும் சம தூரத்தில் வைத்து பா.ஜனதா பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதமே தேர்தல் வரலாம் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலையும் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அதற்குள் தமிழகத்தில் தங்கள் இமேஜை வளர்ப்பதற்கான முயற்சியை பா.ஜனதா கையில் எடுக்கும் . அதற்கு கவர்னரின் செயல்பாடுகள் கைகொடுக்கும் என்று பா.ஜனதா நம்புகிறது.

எனவே அ.தி.மு.க. அரசு தானாக கவிழ்ந்தாலும் சரி. உட்கட்சி பிரச்சினையால் கவிழ்க்கப்பட்டாலும் சரி. இரண்டுமே தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று கருதுகின்றனர்.

ஆறுமாத காலம் கவர்னர் ஆட்சி ஏற்பட்டால் மத்திய அரசின் பல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

பா.ஜனதாவின் இந்த வியூகத்தை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றாகி விடுவதே நன்று என்ற பாணியில் செயல்படுவதாக கூறுகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும், கோர்ட்டு அல்லது கவர்னர் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும்.

Leave a comment