சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது

305 0

201609041004246732_The-worlds-longest-glass-bridge-over-a-scenic-canyon-in_SECVPFசீனாவில் இரு மலைக்குன்றுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் கவனத்தை கவர்ந்த நீளமான கண்ணாடி பாலம் திடீரென மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற பகுதியில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

3.4 மில்லியன் டாலர் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 மீட்டர் அகலத்தில் பாலத்தின் நடுவே பாதை உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹாய்ம் டோடன் என்ற வடிவமைப்பாளர் இதனை வடிவமைத்துள்ளார்.

திறக்கப்பட்ட இரண்டே வாரங்களில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாலத்தை கண்டுகளிக்க தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் குவிய ஆரம்பித்தனர். இந்த பார்வையாளர் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மென்பொருள் வடிவமைக்கப்படுவதால் கண்ணாடி பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் மீண்டும் எப்போது திறக்கப்படும்? என்பது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததால் ஏற்கனவே முன்பதிவு செய்து இங்கு வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.