ஜெயலலிதா மரணம்: விவேக் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

4615 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளர், தனி செயலாளர்கள் என பலரும் விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டு ஆஜரானார்கள்.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் மேலாளராக இருந்த பன்னீர் செல்வம் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவருக்கு பதிலாக வக்கீல் ஆஜராகி சில விளக்கங்களை ஆணையத்தில் முன் வைத்தார்.

இதற்கிடையில் இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.யின் செயல் தலைவருமான விவேக் வருகிற 13-ந்தேதி அல்லது 14-ந் தேதிகளில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 15-ந்தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஜெயலலிதாவின் டாக்டர் பாலாஜியும் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அவரையும் வருகிற 13 அல்லது 14-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித் தார்.

மேலும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பனிடம் விசாரணை நடத்துவதற்காக 12-ந்தேதி ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a comment