இளைஞர்களிடம் தேசப்பற்றை உருவாக்க வேண்டும்!

249 0

‘இளைஞர்களிடம் நேர்மையின் மதிப்பையும், வெளிப்படைத்தன்மையையும், தேசப்பற்றையும் உருவாக்க வேண்டும்’ என்று சென்னையில் நடந்த விவேகானந்த நவராத்திரி விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் கடந்த 6-ந்தேதி விவேகானந்த நவராத்திரி விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் இல்லத்தில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

விவேகானந்தர் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரி நிவேதிதா ஒரு மாத காலம் இங்கு தங்கியிருந்து பெண் விடுதலைக்காக விவேகானந்தரின் கருத்துகளை விளக்கும் பணியினை மேற்கொண்டார். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது மக்கள் அடிமைப்பட்டிருந்த நிலையில், விடுதலை போராட்டத்திற்கு தூண்டுகோலாக விவேகானந்தர் இருந்ததுடன், மக்கள் விழிப்புடனும், சுயசார்புடனும், உறுதியுடனும் இருக்கவேண்டும் என்றார். பலமே வாழ்க்கை, பலவீனமே இறப்பு என்று விவேகானந்தர் கூறி சென்றுள்ளார்.

விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றும் போது, தான் சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் மதத்தை சேர்ந்தவர் என்றும், பல்வேறு மதங்களில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்கு புகலிடம் அளிக்கும் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விவேகானந்தர் தமிழ்நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததுடன், அவர்களிடையே பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இளைஞர்களை ஈர்த்தார். விவேகானந்தரும், சகோதரி நிவேதிதாவும் கல்வியின் மூலமே வறுமையையும், துயரையும் ஒழிக்க முடியும் என்று நம்பினார்கள். பாரதியார், சகோதரி நிவேதிதாவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு ‘புதுமைப் பெண்’ என்ற இலக்கிய படைப்பை உருவாக்கினார்.

இன்றைய இளைஞர்களிடம் நேர்மையின் மதிப்பு, வெளிப்படைத்தன்மை, தேசப்பற்று ஆகியவற்றை உருவாக்க வேண்டும். விவேகானந்தரின் கருத்துகள் உலகம் முழுவதும் பரவுவதற்கு உரியவற்றை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கொல்கத்தா பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சாமி கவுதமானந்தஜி மகராஜ், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்த மகராஜ், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனர் எஸ்.என்.பாண்டே, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment