சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் கல்வீச்சு!!

576 0

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இனம் தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சுன்னாகம் பொலிஸார் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்த போதிலும் அதனையும் மீறி அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு நேற்று இரவு-08 மணியளவில் குறித்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டம் சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் நேற்றுப் பிற்பகல்- 06.30 மணி முதல் ஆரம்பமாகி இடம்பெற்றது. இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடமாகாண சபை உறுப்பினர் இ. ஜெயசேகரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வலி.தெற்குப் பிரதேச சபையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தி.பிரகாஷ், மற்றும் வலி.தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வட்டார ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பிரதேசப் பொதுமக்கள் எனப் பெருமளவானோரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உரையாற்ற ஆரம்பித்த இரு நிமிடங்களில் தெற்குப் பக்கத்திலிருந்து இனம் தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வீசப்பட்ட சற்றுப் பெரிதான குறித்த கல் தேர்தல் மேடையை அண்டிய பகுதியில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்கு அருகில் விழுந்துள்ளது. குறித்த கல்வீச்சுத் தாக்குதலால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறித்த கல்வீச்சுத் தாக்குதலையடுத்து கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் கூட்டம் இடம்பெற்ற பகுதியை அண்டிய பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொண்ட போதும் சந்தேகத்துக்கிடமான எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதுடன் எந்தவித அசம்பாவிதங்களுமின்றித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Leave a comment