பிரசாந்தனுக்கு உயிர் பிச்சை வழங்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

223 0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனின் உயிரை காப்பாற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கறுவாக்கேணி கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவரின் செல்லப் பிள்ளையாக இருந்த பிள்ளையான் எமது பகுதியில் எவ்வளவு அபிவிருத்திகளை செய்திருக்க முடியும். பாரிய தொழிற்சாலையை உருவாக்கியிருந்தால் எமது பிள்ளைகள் சகோதர இனத்தவர்களின் கடைகளில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை வந்திருக்காது. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை சுருட்டுவதில் தான் பிள்ளையானின் கவனம் இருந்ததே தவிர தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தியில் இவரது கவனம் இருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையில் இருந்து சுருட்டிய கணக்குகளை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்றத்தின் கணக்காய்வு பகுதிக்கு அறிக்கைகளை கோரி சமர்ப்பித்துள்ளேன். ஆராய்வேன் விடமாட்டேன். பல நிதிகள் மாகாண சபையில் இருந்து சூரையாடப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் கறுவாக்கேணி மைதானத்தில் வைத்து எங்கள் உறவுகளை எரித்தார்கள், சகோதரர்களை படுகொலை செய்தார்கள் இவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள். அதுமட்டுமா வாழைச்சேனையில் உயிரிழந்த போராளிகளின் உடலை கட்டி வீதிகளில் இழுத்து கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனின் உயிரை காப்பாற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆரையம்பதி பகுதியில் இராணுவத்தோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டமையால் விடுதலைப் புலிகள் கொண்டு சென்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், தங்கேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று அவர்களுடன் வாதாடி இவரை காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இந்த விடயத்தை பிரசாந்தன் நிகழ்வொன்றில் பேசினார். ஆனால் அந்த நன்றி கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இருக்கவில்லை.

Leave a comment