லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை ஏவி துணைவேந்தரை கைது செய்துள்ளனர்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

235 0

மந்திரிக்கு பங்கு கொடுக்காததால் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை ஏவி துணைவேந்தரை கைது செய்துள்ளனர் என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே. மனோகரன் மகனும், தர்மபுரி மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளருமான டாக்டர் பிரபுராஜசேகர் – டாக்டர் சிவசங்கரி ஆகியோரின் திருமணம் இன்று நடந்தது.

திருமணத்தை நடத்தி வைத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

நாட்டிற்கு விடிவுகாலம் எப்போது ஏற்படும் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் வந்துள்ளீர்கள். உங்களது எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு பெயர் மாற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

தமிழ்நாட்டில் ஆண்டு வரும் குதிரை பேர அரசு பெயர் மாற்றத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். டெல்லியில் உள்ள கர்நாடக அரசின் இல்லத்திற்கு கர்நாடக அவுஸ் என்றும், கேரள அரசின் இல்லத்திற்கு கேரள அவுஸ் என்றும் பெயர் அப்படியே உள்ளது. ஆனால் தமிழ்நாடு இல்லத்திற்கு மட்டும் மோடி அரசின் துதிபாடிக்கொண்டிருக்கும் தமிழக அரசு அடிமையாக இருப்பதால் பெயர் மாற்றம் என்ற இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அந்த பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெயர் மாற்றத்தை செய்தால் எந்த காரணத்தை கொண்டு தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி மாற்றினால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

அமைச்சராக உள்ள செல்லூர் ராஜு, மன்னிக்கவும் தெர்மாகோல் ராஜீ என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அவர் அறிவாளி, புத்திசாலி,விஞ்ஞானி. அவர் அரசின் நலத்திட்டங்கள் பெற அ.தி.மு.க. உறுப்பினர்கள் அட்டை கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

ஒரு அரசு எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும், இது மக்களுடைய வரிப்பணம், நம்முடைய வரிப்பணம். இந்த வரிப் பணத்தில் நடக்கிற அரசு நலத்திட்ட உதவிகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் வழங்க வேண்டும். அதுதான் முறை.

நம்முடைய கலைஞர் ஆட்சியை பிடிக்கும் நேரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது நான்ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வேன் என்று அறிவித்தார். அதே போல ஆட்சிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் பதவி ஏற்றபோது கோப்புகளை அங்கேயே வரவழைத்து 7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார்.

அப்போது நாங்கள் எல்லாம் கலைஞரிடம் ஒன்றை எடுத்துச் சொன்னோம், ரூ.1 கோடி அல்ல, 2 கோடி அல்ல, 100 கோடி அல்ல, 500 கோடி அல்ல, 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறீர்கள் இதில் அதிகமாக பயன் பெறுபவர்கள் அ.தி.மு.க. காரர்கள் தான். இது நியாயமா? என்று கலைஞரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைவரையும் தமிழக விவசாயிகளாகத்தான் பார்க்கிறேன் என்று கூறினார். அவர்கள் அ.தி.மு.க.வினராகவோ, காங்கிரஸ்காரர்களாகவோ தி.மு.க.காரர்களாகவோ கம்யூனிஸ்டு காரர்களாகவோ பார்க்கவில்லை என்று கூறினார்.

அப்படிப்பட்ட கலைஞரின் பெருந்தன்மையை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது தெர்மாகோல் ராஜு கூறியதை எண்ணிப் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார், இன்றைக்கு லஞ்ச ஊழல்கள் கொண்ட ஆட்சி நடக்கிறது. இவர்கள் வாங்கக்கூடிய லஞ்சத்தில் மந்திரிகளுக்கும் பங்கு போகிறது. அந்த பங்கு சரியாக போகவில்லை என்ற காரணத்தினால் தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டு துணைவேந்தரை கைது செய்திருக்கிறார்கள்.

எனவே தமிழ்நாட்டில் இப்போதுஇருக்கின்ற ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். துணை வேந்தர் கைது விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த ஆட்சி மாதக்கணக்கில் அல்ல, நாள் கணக்கில் மாற்றப்பட்டு திமு.க. ஆட்சிக்கு வரும். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விவகாரங்களை எடுத்து கண்டுபிடித்து ஊழல்களில் யார்-யார்? ஈடுபட்டார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை. ஊழல் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள், நண்பர்கள் பேரம் பேசியவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவோம்.

இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் சூழ்நிலை விரைவில் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறன்.

திருமணம் முடிந்துள்ள தம்பதிகள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும், என்னுடைய பெயர் தமிழ் பெயர் அல்ல, கம்யூனிஸ்டு கொள்கைகள் மீது கொள்கை பிடிப்பு வைத்திருந்த தலைவர் கலைஞர் அந்த நேரத்தில் நான் பிறந்ததால் எனக்கு ரஷ்ய நாட்டின் கம்யூனிச தலைவராக இருந்த ஸ்டாலின் பெயரை சூட்டினார். இது தமிழ் பெயராக இல்லை என்றாலும் இது காரண பெயர் ஆகும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தளி பிரகாஷ், இன்பசேகரன், முன்னாள் எம்.பி. சுகவனம், தர்மபுரி மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment