இரட்டை குடியுரிமை விவகாரம் எதிரொலி: ஆஸ்திரேலியாவில் 10-வது எம்.பி., பதவி இழப்பு

230 0

ஆஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக தொழிற்கட்சியை சேர்ந்த 10-வது எம்.பி., டேவிட் பீனேயும் தனது பதவியை இழக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது. ஆனால் அங்கு ஆளும் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் இரட்டை குடியுரிமை வைத்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2017-ம் ஆண்டில் அங்கு இரட்டை குடியுரிமை விவகாரத்தில் 9 எம்.பி.க்கள் பதவி இழந்தனர்.

ஆளும் கட்சி எம்.பி.க்கள் 2 பேரின் பதவியும் பறி போனது. ஆனால் பின்னர் அவர்கள் வெளிநாட்டு குடியுரிமையை விட்டுக்கொடுத்து, டிசம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் எம்.பி.க்கள் ஆகினர். இதனால்தான் அங்கு பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தப்பித்தது.

இந்த நிலையில், அங்கு தொழிற்கட்சியை சேர்ந்த எம்.பி., டேவிட் பீனேயும் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிக்கினார். அவர் இங்கிலாந்து குடியுரிமையையும் வைத்திருந்தார். ஆனால் அதை அவர் விட்டுவிட்டதாக சொன்னாலும், அதை அவரால் சட்டபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. இதனால் அவரது பதவி பறிபோகிறது.

இதுபற்றி அவர் கூறுகையில், “நான் இரட்டை குடியுரிமை இல்லாதவன் என்பதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. எனவே நான் பதவி விலகுகிறேன்” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் பதவி இழக்கும் 10-வது எம்.பி. என்ற பெயரை அவர் பெறுகிறார்.

இந்த விவகாரத்தில் தொழிற்கட்சியின் இன்னொரு எம்.பி., கேத்தி கல்லாகெர், கோர்ட்டை நாடி உள்ளார். அதன் தீர்ப்பைப் பொறுத்து அவர் முடிவு எடுப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment