சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் சுரங்க ஆஸ்பத்திரி ஏவுகணைகள் வீசி தகர்ப்பு

220 0

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் சுரங்க ஆஸ்பத்திரி மீது சிரியா ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சுரங்க ஆஸ்பத்திரி இடிந்து தரைமட்டமானது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். அவற்றில் ஹமா மாகாணமும் ஒன்று. அங்கு காபி ஷிதா நகரில் பூமிக்கு அடியில் 60 அடி (20 மீட்டர்) ஆழத்தில் ‘அல் மகாரா’ என்ற பெயரில் சுரங்க ஆஸ்பத்திரியை கிளர்ச்சியாளர்கள் கட்டியிருந்தனர்.

அங்கு ஏராளமான டாக்டர்களும், நர்சுகளும் பணி புரிகின்றனர். மாதத்துக்கு 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். 150 மிகப் பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் சுரங்க ஆஸ்பத்திரி மீது சிரியா ராணுவம் 5 ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. அது பூமியை துளைத்து சென்று தாக்கும் அதிநவீன சக்தி கொண்டவை.

ஏவுகணைகளின் தாக்குதலில் சுரங்க ஆஸ்பத்திரி இடிந்து தகர்ந்தது. அதில் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சிரியா ராணுவத்துக்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. எனவே ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகள் வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை சிரியாவும், ரஷியாவும் மறுத்துள்ளன.

Leave a comment