போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்

222 0

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு 13-வது சம்பள கமி‌ஷன்படி சம்பளத்தை உயர்த்துவது பற்றி கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது.

அரசின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த அரசு போக்கு வரத்து கழகங்களின் 14 தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதை வலியுறுத்தி அவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வேலை நிறுத்தம் செய்தனர்.

22 தடவை அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. இதையடுத்து இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டுக்கு சென்றது. ஐகோர்ட்டு ஒரு நீதிபதியை நியமித்து ஊதிய உயர்வு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதின் பேரில் போக்குவரத்து தொழிலாளர்கள் 12-ந்தேதி முதல் வேலைக்கு திரும்பினார்கள்.

போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பொது மக்களுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்கவும், புதிய பஸ்கள் வாங்கவும் டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதற்காகவும் தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால் அரசு போக்கு வரத்து கழகங்கள் வி‌ஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவியபடி உள்ளது.

இந்த நிலையில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது.

இதுபற்றிய தகவல்கள் இன்று மதியம் அதிகாரப் பூர்வமாக வெளியானது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியர்களில் சாதாரண ஊழியர்கள் முதல் மூத்த ஊழியர்கள் வரை அனைவருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்கள் தங்களது சர்வீசுக்கு ஏற்ப ரூ.3,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளத்தை பெற இயலாது.

பிப்ரவரி மாதம் அவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்று மதியம் தங்களது ஜனவரி மாத சம்பளத்தில் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை அறிந்ததும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பள பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் நாளை சென்னையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் சம்பள பிடித்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் நீதிமன்றத்தை அணுக தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துஇருப்பதாக தெரிகிறது.

இதுபற்றி சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், “அரசின் முடிவு தன்னிச்சையானது. இதுபற்றி நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்” என்றார்.

எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில், “சம்பள பிடித்தம் குறித்து நாங்கள் நாளை போக்குவரத்து கழக செயலாளரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம். அவர் தெரிவிக்கும் தகவல்களை பொருத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்” என்றார்.

எனவே சம்பள பிடித்தம் வி‌ஷயத்தில் தொழிற் சங்கத்தினர் எத்தகைய எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்பது நாளை தெரியவரும்.

Leave a comment