ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை! – என்கிறார் சுசில்

305 0

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தாரே தவிர புதிய அரசாங்கத்தை உருவாக்கும் எண்ணம் அவரிடம் இல்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வழங்கினால் சுதந்திரக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பேன் என ஜனாதிபதி கூறியதை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் தன்னுடன் கைகோர்ப்பதனை ஜனாதிபதி உண்மையிலேயே விரும்புகின்றார். கட்சிக்குள் பிளவுகள் இல்லாமல் ஒற்றுமை நிலவ வேண்டுமென்பதனையே அவர் இதன் மூலம் வலியுறுத்துகின்றார். அவர்கள் வெவ்வேறு திசையில் பயணிப்பதனை பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதனை மறந்து அடிக்கடி தனி அரசாங்கம் உருவாகுவதனைப் பற்றியே பேசுகிறது. ஐ.தே. கவினர் தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் யாப்பினை நன்கு புரிந்துக் கொண்டதன் பின்னருமே அறிக்கைகளை விட வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதியும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் பொருளா தாரத்தை தான் கையேற்கப்போவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் தேசிய பொருளாதார சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பல அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்றப்பொவதாக கூறி வருவதனை நான் செவிமடுத்தேன். அவர்கள் எப்போதும் சிங்கப்பூரைப்பற்றியே பேசுகின்றனர். அவர்கள் கனவுலகில் வாழ்கின்றனர். நாம் இன்றைய நாளுக்கு நடைமுறை சாத்தியமான விடயங்கள் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்று நாட்டின் அபிவிருத்தி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திலேயே தங்கியுள்ளது.” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment