அமைச்சர் திகாம்பரம் தொண்டமானுக்கு விடுத்திருக்கும் சவால்

234 0
எந்தவொரு ஒரு நபரும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் விசாரணையின் முடிவில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்ற அத்தனை ஊழல்கள் தொடர்பாகவும் ஆவணங்களுடன் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். விசாரணைக்கு அழைத்தால் போகத்தானே வேண்டும். இதில் என்ன வீரம் பேச வேண்டியிருக்கிறது. உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடிக்கத்தானே வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எப்.சி.ஐ டி க்குப் போகத்தயார் என ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளமை தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யார் மீதும் பொய்க்குற்றம் சாட்டி அரசியல் லாபம் தேடும் நோக்கம் எமக்கில்லை. நான் அமைச்சுப்பொறுப்பை ஏற்றவுடனேயே அமைச்சுக்கு கீழாக வழங்கப்பட்ட நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்தது. அது தொடர்பான ஆதாரங்களை நாம் சேர்ப்பதற்கு பல தடைகள் காணப்பட்டன.

குடும்ப நிறுவனமாக இயங்கும் மன்றத்தில் இருந்து ஆவணங்களை அவர்கள் மறைத்தார்கள். அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாம் பல்வேறு பிரயத்தனங்களைச் செய்யவேண்டியிருந்தது. அவர்களோடு கூட இருந்தவர்களிடம் இருந்தே தேவையான ஆவணங்களை இப்போது பெற்றுக்கொண்டுள்ளோம்.

மேலதிகமாக மன்றத்தின் ஊடாக அரச நிதியில் கட்சிக்காரியாலயம் கட்டுவதற்கு பணம் செலவிடப்பட்டமை தொடர்பிலும் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் வெளிநாட்டுக்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டமை தொடரபில் நான் பலமுறை பகிரங்கமாகவே கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நாங்கள் தூங்கவில்லை. துடிப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள். கடந்த மூன்று வருடங்களாக தூங்கியவர்கள் தான், நாங்கள் ஆதாரங்களைக் கொடுத்தவுடன் திடுக்கென எழுந்து ஓலமிடுகிறார்கள். இதுபற்றி பேசுகிறார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்படும் போது யார் என்றாலும் போகத்தானே வேண்டும். இதில் என்ன வீரம் பேச இருக்கிறது. அழைக்கும்போது போய் முடியுமானால் குற்றமற்றவர் என நிரூபியுங்கள் என சவால் விடுக்கின்றேன். நாங்கள் சட்டத்திற்கு முகம் கொடுக்க தயாராகவே முறைப்பாடுகளை தெரிவித்துள்ளோம்.

ஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சுப்பதவியை பெற்றிருப்பது, பிச்சைக்காரன் புண்ணை பெரிதாக்கியதுபோல இழிவான செயலாகும். ஒரு மலையகப் பெண்ணை அதிபர் அவமதித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தான் தமிழ் கல்வி அமைச்சை பொறுப்பேற்க மாட்டேன். நீதியான விசாரணையை நடாத்தி அவருக்கு நியாயயம் பெற்றுக்கொடுத்தால்தான் பதவி ஏற்பேன் என சொல்லியிருந்தால் அதுதான் தன்மானத் தமிழனுக்கு கௌரவமாகும்.

மாறாக மலையக தமிழ் சமூகத்திற்கே காயம் ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் நழுவி விழுந்த அமைச்சுப் பதவியை தாங்கிப்பிடிப்பதும் அதனை வெற்றி என ஆர்ப்பரித்து கொண்டாடுவதும் பிச்சைக்காரன் தனது புண்ணை பெரிதாக்கி அதில் வருவாய் சேகரிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

நாங்கள் ஹட்டனில் நடாத்துவது அதிபருக்கு நீதி வேண்டும் போராட்டமாகும். அதன்போது அதிபருக்கு துரோகம் இழைத்தவர்களுக்கும் அவர் மீது சுமத்தப்பட்ட அவமானத்தின் மீது பதவி சுகம் அனுபவிப்பவர்களுக்கும் வலிக்கத்தானே செய்யும்.

நாங்கள் நுவரெலியாவில் மாத்திரமல்ல, பதுளையில் மட்டுமல்ல முழு மலையகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவோம். அதிபரை தாக்கிய முதல் அமைச்சரை மடடுமல்ல அரச ஊழியரான தபால் ஊழியரைத் தாக்கிய தமிழ் அமைச்சரையும் அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

Leave a comment