ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கேட்கும் தீபா, தீபக் நிர்வகிக்க அனுமதி கோரி வழக்கு!

259 0

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். இதற்கிடையே அவரது சொத்துக்கள் யாருக்கு என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கேட்டு தாசில்தாரை அணுகினோம். ஆனால் சான்றிதழ் தர தாசில்தார் மறுத்து விட்டார்.

சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்து சான்றிதழ் பெற்று கொள்ளும்படி பதில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எங்களை தவிர சட்டப்பூர்வ வாரிசு யாரும் இல்லை. உயில் எதுவும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. தங்க நகைகள், அசையும், அசையா சொத்துக்கள் என ரூ.52 கோடிக்கு உள்ளன.

சொத்துக்களை முழுமையாக கணக்கெடுத்து 6 மாதங்களில் கோர்ட்டில் தெரிவிக்கிறோம். சொத்துக்களை முறையாக நிர்வகித்து ஒரு ஆண்டுக்குள் உண்மையான கணக்குகளை அளிக்கிறோம். எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment