வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர் மகேஸ்வரன்,
சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும்போது தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்து இரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.
கடந்த 7 வருடங்களாக இவ்வீதியை திறந்து விடுமாறு பிரதமர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலருக்கும் கோரிக்கை விடுத்தோம்.
எனினும் எவரும் செவிசாய்க்கவில்லை, எமக்காக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டிய வீதியொன்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கின்றனர். அவ் வீதிகூட செப்பனிடப்படாத வீதி. இதனால் மாணவார்கள், கர்ப்பிணி தாய்மார் உட்பட பலரும் அசௌகரியங்களை கடந்த 7 வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றோம்.
எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையிலேயே நாம் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்.” என தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசத்தில் ஈடுபட முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக தெரிவித்து குறித்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடும் வகையில் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படாவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

