மணிப்பூர் முதல்வர் பயணம் செய்த விமானம் தரையிறங்கும்போது பறவை மோதியது

1537 28

மணிப்பூர் முதல்வர் உள்ளிட்ட ஏராளமான பயணிகள் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது பறவை மோதியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

டெல்லியில் இருந்து கவுகாத்தி வழியாக மணிப்பூர் தலைநகர் இம்பால் நோக்கி ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டு வந்தது. அதில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்ளிட்ட 160 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஒரு பறவை மோதியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், பறவை மோதியதில் விமானத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது. இதன் காரணமாக  விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.
விமானம் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சாப்பாடு இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்று பிற்பகல் வரை மாற்று விமானம் சாத்தியம் இல்லை என்பதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கவுகாத்தி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருப்பதாக மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a comment